Friday, April 17, 2009

திருவனந்தபுரமும் பெங்களூருவும்...3


அலம்பிய பின் துண்டைத் தேடும் முகம் போல மழை பெய்து ஈரமான பூமியாகவே பெரும்பாலும் காக்ஷி அளித்தது கேரளா. பானுப்ரியா.. சித்ரா.. போலின்றி சகல பெண்களும் தாவணியோ துப்பட்டாவோ அணிந்திருந்தார்கள். மாமனார்கள் இன்ப வெறியின்றி சாதுவாய் வேஷ்டி-துண்டு-குடை காம்பினேஷனில் நடந்தார்கள். லைம் சோடா நிறைய விற்றுத்தீர்ந்தபடியிருந்தது.

ஹரிஹரனின் அத்திம்பேர் எனக்காக நிறைய சிரமப்பட்டு பதிமூன்று இடங்களை நேரில் சென்று பார்த்து, ground floor-ல் western toilet இருக்கும், சுத்தமான இடத்தை பதிவு செய்திருந்தார்.

விநாயகா டூரிஸ்ட் ஹோம்.

நியூ தியேட்டர் அருகில், இரயில் நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் [பத்து பேர் மாறி மாறி] இருந்தது.

ரூமிலிருந்து ஆல் இந்தியா ரேடியோவிற்கு தொல்லை பேசினேன். இந்த மாதத்திலிருந்து [april] என்னுடைய சம்பாவனையை சற்று கூட்டியிருப்பதாய் ஏழாம் தேதி கடிதம் வந்தது. அதைக் quote செய்து fax அனுப்பியிருந்தேன். அதை ஞாபகப்படுத்தினால் இந்த ப்ரோக்ராமின் செக்கை revise செய்வார்கள்; செய்தார்கள். தினமும் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வருண பகவான் உணர்ச்சிவசப்படுவார்; இரண்டு மணி நேரங்கள் பொழிந்து தள்ளுவார்... சில நாட்களாக இது தான் இங்கே வழக்கம் என்று கேள்விப்பட்டதில் பிரயாண அலுப்பும் களைப்பும் ஜகா வாங்கியது.

"ஹலோ, ரிசப்ஷனா.. இவிடே ஊணு கழிக்காம் ரூம் சர்வீஸ் உண்டோ?"

கொலைபட்ட மலையாளம் கஜேந்த்ரா எனக்கதறியதுபோல், மறுமுனையில் மீன் வாசனையோ மூக்கொலியோ இல்லாத தமிழில் பதில் வந்தது.

"இல்ல சார்... பசங்ககிட்ட சொன்னா, வெளீலேர்ந்து வாங்கீண்டு வருவாங்க... "

"அதுக்கு நாமளே வாங்கினா, நடூல அவன் அடிக்கற காசு மிச்சம் மாமா..." என்றான் அருண்.

அவன் அங்குமிங்கும் தேடியதில், ‘குக்குடக் குமிழ்’ கடைகளுக்கிடையில் (முட்டை) ஓரிடத்தில் வ்ருந்தாவனம் என்று எழுதியிருந்தது. கொட்டை கொட்டையாய் சாதம். ஆனால், சென்னையில் கிளப்பிய பீதி போலில்லாமல் ஒத்துக்கொண்டது.

நாலே முக்காலுக்கே கார் கொண்டுவந்துவிடுமாறு நாஞ்சில் அருளிடம் (staff artiste) சொன்னேன். கார்த்திகை திருநாள் அரங்கம் பக்கத்தில் தான் இருந்தது. "எங்கிருந்து எங்க வேணாலும் காமண்ணேரத்துல போயிடலாம்.. சின்ன ஊர் தான்," என்றார்.

த்ருஸூர் திலீப்குமார் - பாட்டு

சேர்த்தல சிவகுமார் - வயலின்

ஈரோடு நாகராஜன் - ம்ருதங்கம் [chennai]

ஏ.எஸ்.என்.ஸ்வாமி - கஞ்சிரா [banglore]


திலீப் குமாருக்கு அமைதியான முகம். இரண்டு கட்டை ஸ்ருதியில் அழுத்தமான பாட்டு. Sound check என்று முன்னதாக அமர்ந்ததில் அரங்கம் காலியாக இருந்தது. பிறகு விளக்குகளை ஏகத்திற்கு போட்டு இருட்டாக்கியதில், வந்த பின்பும் தெரியவில்லை.

ஏ.எஸ்.என். ஸ்வாமி வந்ததும் ஹொகேனக்கல் - பெங்களூரு அடிதடிகள் மறந்து சகஜமானேன்.

க்ருஹ பலமேமி - ரேவகுப்தி - ஆதி தாளம். அதை பாட ஆரம்பித்தது ஒலியின் சம நிலையை சரிபார்த்துக் கொள்ள என்பதை மறந்து நிறுத்தாமல் பாடினான், ஓரத் திரைகளின் மறைவிலிருந்து நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள் கூப்பிடுவதை அறியாமல். நான் கை அசைத்துக் காண்பிக்கலாம் என்றால் கண்கள் மூடியிருந்தன. ஒருவாறு தெரிவித்தேன். பிறகு குத்து விளக்கேற்றி, எங்களை அறிமுகம் செய்த பின் கச்சேரி தொடர்ந்தது.

நீ தயராதா - வசந்த பைரவி - ரூபக சாபு தாளம். பாவம் நன்றாயிருந்தது.
பின்னர், சஹானாவில் ஆலாபனை.
நட்பு கொண்ட சஹாவின் நாவில் ஆலாபனை; இதழில் - புன்னகை.
‘ஈ வசுதா நீ வண்டி தைவமு’ ஸ்வரங்களுடன்.
விறுவிறுப்பிற்கு விடஜாலதுரா (ஜனரஞ்சனி - ஆதி).

சுபபந்துவராளியில் நல்லதொரு ஆலாபனையைத் தொடர்ந்து ‘என்னாளு ஊரகே’ என்ற சாஹித்யம் மிஸ்ர சாபுவில். 86-லோ, 87-லோ, சோமு மாமா, நாடார் மேடு (ஈரோடு) வீட்டில் பஜனை செய்த போது கணபதி கிருஷ்ணன் பாடி இதே பாட்டிற்கு வாசித்தேன். அந்த நினைவுகள் இப்போது வருகின்றன.

"நாகராஜா...உன் சந்தேகமெல்லாம் என்கிட்டே கேக்காதே... கணபதி கிருஷ்ணனைக் கேளு... அவன்தான் research எல்லாம் பண்ணுவான்..." என்ற, மாமாவின் ‘பக்தாளுக்கெல்லாம் ஒரு விக்ஞாபன’க் குரல் காதுகளில் ஒலிக்கிறது.

மிஸ்ரத்தில் மூன்று தள்ளி தனியாவர்த்தனம். அது ஒரு சிக்கலான இடம். I played some complicated and innovative varieties and decided not to disturb the kanjira player. ஆனால், பூசாரி வரம் கொடுத்தும் ‘ஸ்வாமி’ கொடுக்கவில்லை. அவனே ஒரு கோர்வையை த்ரிகாலம் செய்யப்போய் மாட்டிக்கொண்டான். ‘நாபாலி ஸ்ரீ ராமா’ என்ற செஞ்சுருட்டி கீர்த்தனையும், ஈரோட்டில் நான் அடிக்கடி பாடிக் கொண்டிருந்த ‘கமலாப்த குல’ என்ற ப்ருந்தாவன ஸாரங்கா கீர்த்தனையும் பாடி இனிதே நிறைவடைந்தது.

வெளிச்சத்துக்கு வந்த audience-ல் பாதி பேர் வித்வான்கள். மணி அய்யரின் சிஷ்யர் சுரேந்த்ரன் போன்றோர் வந்திருந்தனர். காதுக்கு இனிமையாக நிறைய அபிப்பிராயம் சொல்லிப் பாராட்டினார்கள். அவைகள் உண்மையாகட்டும் என்று மானசீகமாகப் பெரியவாளை நினைத்துக்கொண்டேன்.

திரும்பி ரூமுக்கு வரும் வழியில் அருள், நேந்திரங்காய் சிப்ஸ் கிடைக்கும் இடங்களை விளக்கியபடி வந்தார்.

மறுநாள் காலை அனந்தபத்மனாப ஸ்வாமி கோயிலுக்குச் சென்றோம். மேற்கு வாசலில் சின்ன படி தான் என்று ஹரிஹரன் சொல்லியிருந்தான். ஆனால் அங்கே, வீல் சேரில் போக அனுமதியில்லை என்றனர். மேலும் வேஷ்டி கட்டாதவர்களை உள்ளே அனுமதிக்கும் வழக்கமில்லை என்றார்கள்.

திரும்பிப் போய்விடலாம் என்று தோன்றியது. வேஷ்டியாவது பேன்ட்டின் மேலே வைத்துக்கொள்ளலாம்; வீல் சேர் இல்லாமல்? வாயிற்காக்கும் ஒருவர், "கொஞ்ச நேரம் வெய்ட் செய்யு சாரே.. ஓஃபீசர் இவிடே வரும்... சோதிக்காம்.." என்றார்; வந்தார்.

வெளிப்ராகாரத்தில் மட்டும் போகலாம் என்ற நிபந்தனை ஜாமீனில் உள்ளே (!) போனேன்.


4 comments:

 1. //வெளிச்சத்துக்கு வந்த audience-ல் பாதி பேர் வித்வான்கள். மணி அய்யரின் சிஷ்யர் சுரேந்த்ரன் போன்றோர் வந்திருந்தனர். காதுக்கு இனிமையாக நிறைய அபிப்பிராயம் சொல்லிப் பாராட்டினார்கள். அவைகள் உண்மையாகட்டும் என்று மானசீகமாகப் பெரியவாளை நினைத்துக்கொண்டேன்.//

  கேரளாவிலே இன்னமும் சுத்த சங்கீதத்தைப் பெரிதும் மதிக்கின்றனர். உண்மையான ரசிகர்கள். உள்ளேயும் போய் தரிசனம் செய்திருப்பீங்க என்று நம்புகிறேன்.

  ReplyDelete
 2. Sri Nagarajan,
  Superb. i just found your blog site. When a performing musician writes, it is very authentic and offers a ring side view of things. Please keep writing. Looking forward to more.
  All the best in all your ventures.
  Jayakanth.
  Kuwait.
  btw, I am also from Erode.

  ReplyDelete
 3. Sri Nagarajan,
  Just found out your blog spot.
  Superb writing. When a performing musician writes so well, it is just wonderful.
  Pl. keep writing. Looking forward to more from you. All the best in all your ventures.
  Jayakanth.
  Erode.

  ReplyDelete